மதுரவாயலில் சினிமா ஊழியர் மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை
மதுரவாயலில், தலையில் காயத்துடன் சினிமா துறை ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
பூந்தமல்லி,
சென்னை மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 17-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரகாந்த்(வயது 34). இவர், திரைப்படங்களுக்கு பின்னணி ஒலி அமைப்பாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராதிகா(30).
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சந்திரகாந்த், இரவு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருடைய மனைவி ராதிகா, நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது, பக்கத்து வீட்டு மாடி படிக்கட்டில் சந்திரகாந்த், தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், பலியான சந்திரகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
கணவன்-மனைவி தகராறு
சந்திரகாந்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு சென்று விட்டு தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் நள்ளிரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தால் மீண்டும் பிரச்சினை வரும் என்பதால் அவர் வீட்டில் உள்ள யாரையும் எழுப்பாமல் இரண்டு வீடுகளுக்கும் நடுவில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி பக்கத்து வீட்டு மாடி படிக்கட்டு வழியாக தனது வீட்டு பால்கனிக்கு சென்று படுத்துக்கொள்வார்.
பின்னர் காலையில் எழுந்து வீட்டுக்குள் சென்று விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொலையா?
நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரகாந்த், சுற்றுச்சுவரின் மீது நடந்து செல்லும்போது குடிபோதையில் கால் தவறி பக்கத்து வீட்டு மாடி படிக்கட்டில் விழுந்ததில், தலையின் பின்புறத்தில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது யாராவது அவரை தலையில் அடித்துக்கொலை செய்தனரா? என்ற கோணங்களில் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.