சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மர்மகாய்ச்சல் பரவி வருவதாக கூறி சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2018-01-06 22:15 GMT

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் சாணார்பட்டி ஊராட்சி பெத்தாம்பட்டியில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் 30–க்கும் மேற்பட்டோருக்கு மர்மகாய்ச்சல் பரவியதாக கூறப்படுகிறது. அவர்கள் திண்டுக்கல் மற்றும் கொசவப்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் சுகாதார சீர்கேடு காரணமாகவே மர்மகாய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம், சாக்கடை கால்வாய் வசதியில்லாததால் கழிவுநீர் தெருக்களில் ஓடுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, சாணார்பட்டி சப்–இன்ஸ்பெக்டர்கள் அபுதல்கா, மகாலட்சுமி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு வார காலத்தில் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்