ஆவாரங்காட்டில் 16-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஆவாரங்காட்டில் 16-ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-01-06 22:45 GMT
மணப்பாறை,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு என எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, கடந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியது. இதில் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லாததால் பல்வேறு கிராமத்தினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளை பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதேபோல் பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காட்டில் வருகிற 16-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அனுமதி கிடைக்காததால் ஆவாரங்காடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திட ஊர் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின் படி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் செல்லும் பாதையில் இருபுறமும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைக்கும் பணி, போலீசார் நிற்கும் இடத்தில் தடுப்பு அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஜல்லிக்கட்டை காண வருபவர்களுக்கு பார்வையாளர் மாடம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதும், அதை மாவட்ட நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கால்நடைத்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் பார்வையிட்டு நீதிமன்ற விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வார்கள். இதில் குறைகள் இருப்பின், அதை நிறைவு செய்ய என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் கூறுவார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு திடல் களைகட்டத் தொடங்கி உள்ளது. 

மேலும் செய்திகள்