பா.ம.க. ஆட்சிக்கு வர தொண்டர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
பா.ம.க. ஆட்சிக்கு வர தொண்டர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று விருத்தாசலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், முருகன், ஜெகன், மாவட்ட தலைவர்கள் செல்வ.ஜெகன், குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தன்ராஜ், மாநில மகளிரணி செயலாளர்கள் டாக்டர் தமிழரசி, சிலம்புசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த 28 வருடமாக மக்கள் பிரச்சினைக்காக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது ஊழலை ஒழிக்க போராட வேண்டி உள்ளது. அதனால் தான் பொதுக்குழு கூட்டத்தை 2018–ம் ஆண்டு ஊழல் ஒழிப்பு ஆண்டாக பா.ம.க. அறிவித்து, ஊழலை ஒழிக்க உறுதிமொழி ஏற்று கூட்டத்தை நடத்தி வருகிறோம்.
வருகிற பொங்கல் திருநாள் அன்று கட்சி தொண்டர்கள் அனைவரும் வீடுகளிலும் பா.ம.க. கொடி ஏற்றி கொண்டாட வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தோம். ஆனால் ஊழல் பெருகியது. நாம் ஊழலுக்கு துணை போகிறோம் என்று நினைத்து கூட்டணியைவிட்டு வெளியேறி, அவர்கள் செய்யும் தவறுகளை அறிக்கையாக வெளியிட்டு அறிக்கை போராட்டம் நடத்தி உள்ளேன்.
பா.ம.க. கொள்கையை எந்த காலகட்டத்திலும் விட்டது இல்லை. விலைபேசியதும் இல்லை. சமரசம் செய்ததும் கிடையாது. தமிழகத்தில் உள்ள 370 சாதிகளும் பா.ம.க.வை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும், டாக்டர் அன்புமணி ராமதாசை முதல்வராக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அன்புமணி ராமதாஸ் அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்கள் குறித்து தமிழக மக்கள் பேசி வருகின்றனர். ஆனால் அன்புமணியோ எனக்கு முதல்வராக ஆசை இல்லை. முதல்வராக ஆசைப்படுபவர்கள் என்னுடன் விவாதிக்க வருவார்களா? என்று அழைப்பு விடுகிறார். ஆனால் யாரும் அவருடன் விவாதிக்க தயாராக இல்லை. இதற்கு காரணம் பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் வைத்துள்ளார். இந்த அறிவு திறமை வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லை.
தமிழநாட்டை ஆளும் தகுதி அன்புமணி ராமதாசுக்கு மட்டுமே உண்டு. ஒரு நடுத்தர குடும்பம் கல்வி, மருத்துவத்தை தர ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அன்புமணி முதல்வரானால் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுத்துவிடுவார். விவசாயம் முன்னேற்றத்திற்கும், பொது மக்களின் முன்னேற்றத்திற்கு அன்புமணி நிறைய திட்டங்களை வைத்து இருக்கிறார்.
இதனால் அன்புமணியை பார்த்து ஊழல் வாதிகள் பயந்து வருகின்றனர். கடலூர் மேற்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளையும் பா.ம.க. கைப்பற்ற வேண்டும். கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
ஊழலை ஒழிக்க 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதனை சரி செய்ய பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு பா.ம.க. தொண்டர்கள் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.