ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் இயக்குனர் களஞ்சியம் பேட்டி

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் களஞ்சியம் கூறினார். இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களுக்கு கூறியதாவது:– கச்சத்தீவு பிரச்சினை தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அல்லாதவர்

Update: 2018-01-06 20:30 GMT

நெல்லை,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் களஞ்சியம் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களுக்கு கூறியதாவது:–

கச்சத்தீவு பிரச்சினை

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அல்லாதவர்கள் ஆட்சி செய்ததால் தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு போன்ற பிரச்சினைகள் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது. இந்த ஆட்சி காலங்களில் தமிழகத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

காமராஜர் ஆட்சி செய்த போது தமிழகம் விவசாயம், தொழில்துறை, கல்வித்துறையில் முன்னேறிய மாநிலமாக இருந்தது. அதன் பிறகு அனைத்து துறைகளிலும் பின்நோக்கி சென்றுவிட்டது. தமிழகம் மீண்டும் முன்னேற வேண்டும் என்றால் தமிழகத்தை தமிழர் தான் ஆட்சி செய்யவேண்டும். இதற்காக 10 தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். நாங்கள் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து அரசியலில் பங்கெடுத்து வருகிறோம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு...

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கவேண்டும். புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கட்சி அமைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ரஜினிகாந்த் தமிழக மக்களுக்காகவும், தமிழக உரிமைக்காகவும் எப்பொழுதும் குரல் கொடுத்தது கிடையாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் மறைமுகமாக பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய கட்சிகளின் கலாசாரத்தை வளர்ப்பதாக உள்ளது. இதனால் அவர் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்