தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் விபத்தில் சிக்கியது விவசாயி படுகாயம்

செய்யாறு அருகே தற்காலிக டிரைவர் ஓட்டிச் சென்ற அரசு பஸ் மோதியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2018-01-06 22:45 GMT
செய்யாறு,

ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நேற்றுடன் 3-வது நாள் ஆன நிலையில் வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பிரச்சினையை சமாளிக்க தற்காலிக டிரைவர்களை பணியில் அமர்த்தி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தற்காலிக டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்களையும், கண்டக்டர்களுக்கான ஆவணங்களையும் மேலாளர் துரைராஜ் சரிபார்த்து அவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்தார். அதன்படி தற்காலிக டிரைவர்கள் 24 பேரும், தற்காலிக கண்டக்டர்கள் 11 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மூலம் பஸ் இயக்கப்பட்டது.

அதன்படி செய்யாறிலிருந்து கோவிலூர் செல்லும் பஸ்சை பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த தற்காலிக டிரைவர் ரவிச்சந்திரன் (வயது 22) ஓட்டினார். தற்காலிக கண்டக்டராக நல்லாளம் கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (39) செயல்பட்டார். அவரும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவராவார்.

பஸ் நேற்று மாலை 6.30 மணிக்கு கோவிலூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இருங்கல் கிராமத்தின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இருங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகேந்திரன் (43) படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் செய்வதறியாது திகைத்த டிரைவர் ரவிச்சந்திரன் பதற்றத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார். பஸ்சில் இருந்த பயணிகளும் கீழே இறங்கினர். படுகாயம் அடைந்த விவசாயி மகேந்திரன் செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்