நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கிவைத்தார்

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கிவைத்தார்.

Update: 2018-01-06 21:30 GMT

நெல்லை,

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கிவைத்தார்.

தாமிரபரணி மகாபுஷ்கர விழா

2018–ம் ஆண்டு குருபெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு குரு மாறும்போது அதிதேவதையாக விளங்கக்கூடிய தாமிரபரணி நதிக்கு மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. இது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும். இந்த தாமிரபரணி மகாபுஷ்கர விழா 10–10–2018 அன்று தொடங்கி 22–10–2018 வரை நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து 1 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் இருந்து புன்னகாயல் வரை தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தவேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் எட்டெழுத்து பெருமாள் தர்மபதி அறக்கட்டளையினர், அண்ணா பல்கலைக்கழக மாணவ–மாணவிகள், துறவிகள் அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுத்தம் செய்யும் பணி

இந்தநிலையில் நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ஜடாயூத்துறை அதாவது ராமர் ஜடாயூவுக்கு தர்பணம் கொடுத்த இடம் என்று கூறப்படுகின்ற ஜடாயூத்துறை உள்ள தாமிரபரணி நதி பகுதியில் நேற்று தாமிரபரணி ஆற்றையும், சுற்றி உள்ள பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

இந்த பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கிவைத்தார். இதில் பயிற்சி உதவி கலெக்டர் இளம்பகவத், நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சக்தியநாதன், எட்டெழுத்து பெருமாள் கோவில் நிர்வாகிகள் வரதராஜூ, ராமலட்சுமி, சண்முகராஜ், இந்தியா சிமெண்ட்ஸ் துணைதலைவர் சண்முகம், டாக்டர் சிவராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரி, பள்ளி மாணவ–மாணவிகள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள் இந்த துப்புறவு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் அந்த பகுதியில் மக்களிடையே தாமிரபரணியை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடத்தினார்கள். காலை முதல் மாலை வரை இந்த பணி நடந்தது. இதில் ஈடுபட்டவர்களுக்கு எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து எட்டெழுத்து பெருமாள் கோவில் நிர்வாகி வரதராஜூ கூறுகையில், தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பாபநாசம் முதல் புன்னகாயல் வரை உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தப்படுத்தி நதியை தூய்மையாக வைத்திருக்கமுடிவு செய்து உள்ளோம். மேலும் அனைத்து படித்துறைகளையும் சீரமைக்கவேண்டும். ஜடாயூத்துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனால் இங்கு முதலில் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்