வளவனூரில் உள்ள ஏரியில் மண் கொள்ளையை கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம் அருகே வளவனூர் ஏரியில் மண் கொள்ளையில் ஈடுபட்ட பொக்லைன், லாரிகளை சிறைபிடித்து 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-06 21:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ளது வளவனூர். இங்குள்ள ஏரியின் மூலம் சுற்றியுள்ள சாலையாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், லிங்காரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பருவமழை தொடங்கும் முன்பாக ஏரியில் பொதுப்பணித்துறையினரின் மூலம் வண்டல் மண் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஏரி பகுதியில் தனிநபர்கள் சிலர் மண்ணை திரு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மண் திருட்டு நடந்து கொண்டே இருந்தது.

நேற்று பட்டப்பகலில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு லாரிகளில் சிலர் மண் எடுத்து கொண்டு இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த, சகாதேவன்பேட்டை, நல்லரசன்பேட்டை, வளவனூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏரிக்கு ஒன்று திரண்டு சென்றனர். தொடர்ந்து அவர்கள், அங்குள்ள ஏரியில் நின்றிருந்த பொக்லைன் எந்திரங்கள், லாரிகளை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள், ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையோடு தான் மண் திருட்டு நடந்து வருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மண் திருட்டு கும்பலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். நேரம் செல்ல செல்ல, நிலமை அங்கு மோசமானதால், மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் பொக்லைன் எந்திரம், லாரிகளை அங்கிருந்து வேகமாக எடுத்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், இனியும் வளவனூர் ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளாமல் இருக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்