போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2018-01-06 22:15 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனார் பெயரை வைக்கக்கோரி கடந்த 20 வருடங்களாக போராடி வருகிறோம். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தநிலையில் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனார் பெயரை வைக்கக்கோரி வருகிற 20–ந்தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் நானும் கலந்து கொள்கிறேன்.

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான கோரிக்கைக்காக போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஓரிரு நாளில் இதுகுறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்காவிட்டால், போராட்டத்தில் புதிய தமிழகமும் ஈடுபடும்.

தமிழக அரசு தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டு ஆட்சி செய்தால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்