மாற்று டிரைவர்கள் வைத்து ஓட்டியதால் ஆத்திரம்: அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல், கண்டக்டர் கைது

திருப்புவனம் அருகே தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்களை ஓட்டியதால் ஆத்திரமடைந்த டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர்.

Update: 2018-01-06 22:45 GMT

திருப்புவனம்,

ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் டிரைவராக தவமணி என்பவரும், கண்டக்டராக சதீஷ்குமாரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தவமணி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். சதீஷ்குமார் பின்புறம் அமர்ந்திருந்தார். தட்டான்குளம் அருகில் அவர்கள் சென்றபோது, மதுரையில் இருந்து மானாமதுரை நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 2 பேரும் சேர்ந்து லாரி மீது கல்வீசி தாக்கினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து போனது. இதுகுறித்து லாரி டிரைவர் உதயகுமார் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்களை ஓட்டிய ஆத்திரத்தில் கழுகேர்கடை நிறுத்தத்திற்கு வந்த டவுன் பஸ் மீதும், மணலூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த மற்றொரு டவுன் பஸ் மீதும் தவமணியும், சதீஷ்குமாரும் கல்வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன.

இதுகுறித்து பஸ் டிரைவர் செல்வராசு திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வாசிவம் விசாரணை நடத்தி, கண்டக்டர் சதீஷ்குமாரை கைதுசெய்தார். டிரைவர் தவமணியை வலைவீசி தேடிவருகின்றார்.

மேலும் செய்திகள்