விலங்குகளுக்கும் கணக்கு தெரியும்?

கணக்கிடும் திறன் ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு, விலங்குகளுக்குக் கிடையாது என்று எண்ணுகிறோம். ஆனால் சில விலங்குகளுக்கு ஓரளவு அடிப்படைக் கணக்குத் திறன் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Update: 2018-01-06 09:15 GMT
கடந்த 1900-ம் ஆண்டுகளில் பெர்லினைச் சேர்ந்த ஒருவர், தனது குதிரைக்கு நன்றாக கணக்கு தெரியும் எனக் கூறி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கைக் கூறினால், தனது குதிரை கால் குளம்பால் தட்டி சரியான விடை கூறும் என்றார். இதுகுறித்து ஆய்வுசெய்த ஆராய்ச்சியாளர்கள் அந்தக் குதிரைக்கு கணக்குத் திறன் இல்லை, முகம் மற்றும் உடல் பாவனைகளை கூர்ந்து கவனித்து சரியான விடையை தீர்மானிக்கிறது எனக் கூறினர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில், இன்னும் சில விலங்குகளுக்கு எண்ணிக்கை அறிவு உள்ளது, பொருட்களின் அளவை வைத்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் சில விலங்குகளுக்கு உள்ளது எனக் கூறினர். கடந்த 1980-ம் ஆண்டுகளில் மனிதக் குரங்குகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. இரண்டு கிண்ணத்தில் சாக்லேட்டுகளை வைத்தால், மனிதக் குரங்குகள் அவற்றைக் கூர்ந்து பார்த்து ஒப்பிட்டு, எதில் கூடுதல் சாக்லேட்கள் இருக்கிறதோ அந்தக் கிண்ணத்தை எடுக்குமாம். ஐந்து சாக்லேட்டுகள் வரை அவற்றால் எண்ண முடியுமாம். 2000-ம் ஆண்டுகளில் நடத்திய ஆய்வில், சாதாரண குரங்குகளுக்கு திரையில் தெரியும் பொருட்களை விரைவாக எண்ணும் திறன் உள்ளது எனக் கூறப்பட்டது.

கேட்கும் சத்தங்களின் எண்ணிக்கையையும், திரையில் பார்க்கும் உருவங்களின் எண்ணிக்கையையும் பொருத்திப் பார்க்கும் திறன் குரங்குகளுக்கு உள்ளது எனக் கூறப்பட்டது. சத்தம் தொடர்பான எண்ணிக்கை அறிவு சிங்கங்களுக்கும் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உறுமல் சத்தங்களை வைத்து தமது குழுவில் எத்தனை சிங்கங்கள் உள்ளன என்பதை சிங்கங்கள் அறிந்துகொள்ளுமாம். ஸ்பீக்கர் மூலம் உறுமல் சத்தம் எழுப்பினால், புதிதாக யாரோ ஊடுருவியிருப்பதை அறிந்து அந்த இடத்தை நோக்கி சிங்கம் வரும் அல்லது விலகிச் செல்லும் என்கிறார்கள். ஓநாய்கள், கரடிகள் ஆகியவற்றுக்கும் பொருட்களின் அளவை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல பூச்சிகளுக்கு குறைந்தது 4 வரை எண்ணக்கூடிய திறன் உள்ளது என கடந்த 1990-ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தியுள்ளவர்கள் கூறியுள்ளனர். தேனீ தனது கூட்டைவிட்டு வெளியே பயணம் செய்யும்போது, 4 அடையாளங்கள் வரை எண்ணிக் கொள்ளுமாம். அந்த அடையாளங்களை மாற்றினால், தேனீ குழப்பம் அடைவதையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மீன்களுக்கும் எண்ணிக்கை தெரியும் எனப்படுகிறது. கப்பி வகை மீன், பாதுகாப்புக்காக அதிக மீன்கள் உள்ள கூட்டத்திலேயே இணையுமாம். கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், பொரித்து 3 நாட்கள் ஆன கோழிக்குஞ்சுக்குக்கூட, தீவனம் குறைந்த அளவு, அதிக அளவு எங்கே உள்ளது என அடையாளம் காணத் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவை இடது மற்றும் வலது புறம் மாறி மாறி ஓடுகின்ற னவாம்.

ஆக, விலங்குகளுக்கு கணக்கு பண்ணத் தெரியலாம். ஆனால் நிச்சயம் கால்குலேட்டர் உபயோகிக்கத் தெரியாது!

மேலும் செய்திகள்