கேரளாவுக்கு பஸ்கள் ஓடவில்லை: அய்யப்ப பக்தர்கள் அவதி ரெயில்களில் கூட்டம் அலைமோதியது
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் ஓடாததால் அய்யப்ப பக்தர்கள், தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.
நாகர்கோவில்,
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு பல அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல கேரள அரசு பஸ்களும் குமரி மாவட்டத்திற்கு வந்துசெல்கின்றன. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
ஆனால் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் எதுவும் செல்ல வில்லை. மேலும் நேற்று காலையில் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள்.
அய்யப்ப பக்தர்கள்
கன்னியாகுமரிக்கு வந்துள்ள அய்யப்ப பக்தர்கள் அரசு பஸ்கள் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து சபரிமலைக்கு செல்வது உண்டு. நேற்று கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தடைப்பட்டதால் அவர்கள் மிகவும் அவதியடைந்தனர். இதனால், கார், வேன் போன்ற தனியார் வாகனங்கள் மூலம், ரெயில்கள் மூலம் கேரளாவுக்கு சென்றனர்.
ரெயில்களில் கூட்டம்
குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் தினசரி பஸ் மூலம் கேரளாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். பஸ்கள் எதுவும் கேரளாவுக்கு நேற்று செல்லாததால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இதனால் ரெயில்மூலம் அவர்கள் கேரளாவிற்கு சென்றனர். இதேபோல் பல்வேறு பணிகளுக்காக கேரளா செல்லும் பொது மக்களும் ரெயில்நிலையத்திற்கு படை எடுத்தனர். இதையடுத்து கேரளாவுக்கு சென்ற ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.