பொதுமக்களுக்கு பொங்கல் இலவச பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி அவசர ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்கும் கோப்பை கவர்னர் திருப்பி அனுப்பியதால் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-01-05 22:19 GMT
புதுச்சேரி, 

புதுவையில் ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம். அதாவது தீபாவளி பண்டிகைக்கு தலா 2 கிலோ சர்க்கரையும், பொங்கல் பண்டிகைக்கு அரிசி, வெல்லம் என பொங்கலிட தேவையான 6 வகையான பொருட்களும் வழங்கப்படும்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது சர்க்கரை வழங்குவது தொடர்பான கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்க மறுத்து அதை திருப்பி அனுப்பினார். அதேபோல் இலவச துணி கொள்முதலில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இலவச துணியும் வழங்கப்படவில்லை.

ஒப்புதல் அளிக்க மறுப்பு

இந்தநிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவது குறித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அரசு கோப்பினை தயாரித்து அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பிவிட்டார்.

புதுவையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சிவப்பு ரேஷன்கார்டுதாரர் களுக்கு மட்டுமே இலவச பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி அந்த கோப்பினை கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. கவர்னரின் இந்த நடவடிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இலவச அரிசி மற்றும் பொருட்கள் கிடைக்காமல் அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொருட்கள் வழங்குவதில் சிக்கல்

பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக மீண்டும் கோப்புகள் தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி அனுமதி கிடைத்தாலும் பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் பொங்கல் பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகிப்பது என்பது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். எனவே அரசு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

எனவே இந்த பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு அரசின் இலவச பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவர்னரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாராயணசாமி திடீர் ஆலோசனை

கவர்னரின் இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்க காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தனது அலுவலகத்தில் கூட்டினார். கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கவர்னரின் நடவடிக்கை குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது, இலவசங்கள் வழங்கப்படாததால் அரசு மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். கவர்னரின் நடவடிக்கைக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்