முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைது

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி மாமல்லபுரம் அருகே காரில் தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

Update: 2018-01-05 21:58 GMT
மாமல்லபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது28). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 47 வழக்குகள் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி என்பவர் வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு சூர்யா தலைமறைவானார்.

அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ரவுடி சூர்யா ஒரு காரில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு தப்பிச்செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதைத்தொடர்ந்து மாமல்லபுரம், கேளம்பாக்கம் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். போலீசார் தன்னை பின்தொடர்வதை அறிந்த சூர்யா பட்டிபுலம் பகுதியில் காரை நிறுத்தி தப்பி ஓட முயன்றார். அப்போது கீழே விழுந்த அவருக்கு கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சூர்யாவை பிடித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். இதையடுத்து சூர்யா சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்