பெரியபாளையம் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

பெரியபாளையம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கரை அமைக்கக் கோரி பொதுப் பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-05 23:15 GMT
பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்தால் 2 மதகு கால்வாய் மூலம் உபரி நீர் பெருமுடிவாக்கம் ஏரிக்கு செல்லும். இந்நிலையில், அழிஞ்சிவாக்கத்தில் உள்ள தனி நபர் ஒருவர் 2 மதகு கால்வாய்களையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பொதுமக்களும், சமூக அமைப்புகளும் பல்வேறு புகார்கள் கூறியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் உள்ள ஏரியில் உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அளந்தனர்.

பொதுமக்கள் முற்றுகை

நேற்று காலை ஏரிக்கரையின் தென் பகுதியில் கூடுதலாக ஒரு கரையை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மேற்கொண்டனர். இவ்வாறு ஒரு கரையை அமைத்தால் மழைக் காலத்தில் தண்ணீர் ஏரிக்குள் செல்லாமல் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வருவாய் துறை அதிகாரிகளே ஏரியில் உள்ள இடத்துக்கு பட்டா வழங்கி விட்டு பிறகு அதை அகற்றுவது வேடிக்கையாக உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஏரியில் மதகு கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு பின்னர் மற்ற பணிகளை செய்யலாம் என்று பொதுமக்கள் கூறினர். மேலும் ஏரிக்கு கரை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சரமாரி கேள்வி

தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபா உஷா, கிராம நிர்வாக அதிகாரி பானு, திருவள்ளூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாபு, பணி உதவியாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஏரியில் மதகு கால்வாய்களை அமைக்காமல் மேற்கொண்டு பணிகள் செய்யக் கூடாது என்று பொதுமக்கள் சரமாரியாக அதிகாரிகளை கேள்வி கேட்டனர்.

இதனால் தற்காலிகமாக பணியை நிறுத்திய அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று காலை முதல் மதியம் வரை இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்