கோயம்பேட்டில் இருந்து நகரின் பல இடங்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்கள்
சென்னை கோயம்பேட்டில் இருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு தனியார் பஸ்கள் நேற்று அதிகளவில் இயக்கப்பட்டன.
பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் இருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு தனியார் பஸ்கள் நேற்று அதிகளவில் இயக்கப்பட்டன. ஆனால் கட்டணம் அதிகமாக இருக்குமோ என்ற அச்சத்தில் அந்த பஸ்களில் ஏற பயணிகள் தயங்கினர்.
இதையடுத்து சில தனியார் பஸ் நிறுவன மேலாளர்களும் நேரில் வந்து, “உங்களிடம் இருப்பதை கட்டணமாக கொடுங்கள். அது போதும். காசு இல்லையென்றாலும் பரவாயில்லை, வண்டியில் ஏறுங்கள்”, என்று பயணிகளிடம் கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பயணிகள் ஆர்வத்துடன் அந்த தனியார் பஸ்களில் ஏறி சென்றனர். அந்தவகையில் குறிப்பாக தாம்பரம், வேளச்சேரி, வடபழனி நோக்கி அதிக அளவில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து ஒரு தனியார் பஸ் கம்பெனி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளுக்கு உதவும் வகையில் பஸ்களை இயக்க எங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் அழைப்பு வந்தது. கூடுதல் கட்டண பயம் வந்துவிடக்கூடாது என்பதால் நாங்களே நேரில் வந்து இருப்பதை தாருங்கள் என்ற ரீதியில் பேசி பயணிகளை வண்டியில் ஏற்றிச்செல்கிறோம்”, என்றார்.