வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-01-05 22:15 GMT
அம்பத்தூர்,

அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தயாளன். தனியார் கம்பெனி ஊழியர். இவருடைய மகன் அருண்வெங்கடேசன் (வயது 20). அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். அவருடன் கல்லூரி நண்பரான அபிஷேக் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் உடன் சென்றார்.

வேன் மீது மோதி பலி

சூரப்பட்டு அருகே கள்ளிக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்திச்சென்றபடியே சென்றனர். அப்போது அபிஷேக்கை முந்திச்செல்வதற்காக அருண் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிய போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், எதிரே வந்த தனியார் கல்லூரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அருண் வெங்கடேசன், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்