மந்திரி பதவி பறித்த ஒரு ஆண்டுக்கு பிறகு அரசு விழாவில் அம்பரீஷ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்

மந்திரி பதவி பறித்த ஒரு ஆண்டுக்கு பிறகு அரசு விழாவில் அம்பரீஷ் எம்.எல்.ஏ. அரசு விழாவில் கலந்துகொண்டார்.

Update: 2018-01-05 22:00 GMT
மண்டியா,

மந்திரி பதவி பறித்த ஒரு ஆண்டுக்கு பிறகு அரசு விழாவில் அம்பரீஷ் எம்.எல்.ஏ. அரசு விழாவில் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் நான் மண்டியா மக்களுக்காக தான் உயிர் வாழ்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்தார்.

அரசு விழாவில் அம்பரீஷ் பங்கேற்பு

கன்னட திரையுலகின் பிரபல நடிகரான அம்பரீஷ் கடந்த சட்டசபை தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மந்திரி சபையில் அவருக்கு வீட்டு வசதித் துறை மந்திரி பதவி கிடைத்தது. இதற்கிடையே உடல்நலக்குறைவால் அவர் அடிக்கடி பாதிக்கப்பட்டார். அதற்காக அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதைதொடர்ந்து அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் சரியாக செயல்படவில்லை என அவரது மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இதனால் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.

மேலும் அரசு விழா, கட்சி கூட்டங்களில் அவர் ஒரு ஆண்டாக பங்கேற்காமல் இருந்து வந்தார். மேலும் காங்கிரஸ் அரசின் செயல்பாடு பற்றியும் அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்துவந்தார். இந்த நிலையில் மண்டியா மாநகராட்சி சார்பில் அம்ருதா மகோத்சவா பவன் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான அம்பரீஷ் கலந்துகொண்டார். அவர் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உருக்கமான பேச்சு

பின்னர் அவர் பேசுகையில், மண்டியா மக்கள் என்னை 3 தடவை எம்.பி.யாக ஆக்கினர். மேலும் கடந்த தேர்தலில் என்னை எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற செய்தனர். இதற்காக மண்டியா மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சில சமயங்களில் மக்கள் என்னை திட்டியுள்ளனர்.

சில சமயம் என் மீது அன்புகாட்டியுள்ளனர். நான் மக்களின் செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு உள்ளேன். நான் மண்டியா மக்களுக்காக தான் உயிர் வாழ்கிறேன். அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டு வருகிறேன் என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.

மந்திரி பதவி பறித்த ஒரு ஆண்டுக்கு பிறகு நடிகர் அம்பரீஷ் அரசு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்