கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் பலி

கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ்–2 மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2018-01-05 23:00 GMT

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூர் கிருஷ்ணா அணைக்கட்டு ரோட்டை சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவருடைய மகன் கிஷோர் (வயது 18). இவருடைய நண்பர் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மனோஜ் (18). இவர்கள் 2 பேரும் ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கிஷோர், மனோஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி செல்ல முடிவு செய்தனர். இதற்காக மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் தங்களின் நண்பர் அருணை அழைத்துள்ளனர். ஆனால் அருண் அவர்களுடன் செல்ல மறுத்துள்ளார். பின்னர் அவர் தனது தந்தையிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி கிஷோரிடம் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கிஷோர் ஓட்டினார். மனோஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார். அவர்கள் பொள்ளாச்சி வந்து விட்டு கோவை செல்வதற்காக கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கோவையில் இருந்து எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், கிஷோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோர், மனோஜ் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த நேரத்தில் கிஷோர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் கழன்று கீழே விழுந்தது. இந்த விபத்தில் தலையில் அடிபட்டு மாணவர்கள் கிஷோர், மனோஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். எதிரே வந்து மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த பெண்ணும் படுகாயம் அடைந்தார்.

வலியால் துடித்த அவர்கள் 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்தார். அவருடன் வந்த பெண் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த தகவலின் பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வந்தனர். அவர்கள், விபத்தில் பலியான கிஷோர், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவையில் இருந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (24), அவரது பின்னால் அமர்ந்து வந்த பெண் பனப்பட்டியை சேர்ந்த அவரது உறவினர் புவனா (20) என்பதும் தெரியவந்தது. மாணவர்கள் உள்பட 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

2 மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுனர்களும் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த கிஷோர், சீனிவாசன் ஆகிய 2 பேரும் ஹெல்மெட் (தலைகவசம்) அணிந்திருந்தனர். ஆனால் அவர்கள் ஹெல்மெட்டின் பெல்டை சரியாக பூட்டாமல் வந்துள்ளனர். இதன் காரணமாக விபத்து நடந்த போது அவர்களின் ஹெல்மெட் கழன்று கீழே விழுந்து விட்டது. அந்த நேரத்தில் அவர்கள் 2 பேரும் ரோட்டில் விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 பேரின் ஹெல்மெட்டுகளும் கழன்று விழாமல் இருந்திருந்தால் அவர்கள் காயத்துடன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது மட்டுமல்ல அதை சரியான முறையிலும் அணிய வேண்டியதும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்