எலச்சிப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 6 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டது.;

Update: 2018-01-05 21:45 GMT

எலச்சிப்பாளையம்,

திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 6 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டது. சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்க பணியின் போது 4 கடைகள் இடிக்கப்பட்டது. மீதம் 2 கடைகள் உள்ளது. இதில் இறந்து போனவரின் பெயரில் உரிமத்தை வைத்து ஒரு கடையில் மதுவிற்பனை நடந்து வந்தது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் மது விற்பனையை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவிலின் புனிதம் கெடும் வகையில் கோவில் நிலத்தில் உள்ள கடையில் மது விற்பனை நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கடையின் கட்டிடத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். கோவிலின் பின்புறம் பொதுகழிப்பிடம் கட்டி தர வேண்டும் என்று அறநிலையத்துறையிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 18–ந்தேதி எலச்சிப்பாளையத்தில் உண்ணாவிரதமும், குடியரசு தினத்தன்று திருச்செங்கோடு அறநிலையத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், 31–ந்தேதி சேலம் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்