தடிக்காரன்கோணம் அருகே தேங்காய் துருவியால் அடித்து பெண் கொடூரக் கொலை

தடிக்காரன்கோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் தேங்காய் துருவியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-01-05 20:30 GMT

அழகியபாண்டியபுரம்,

தடிக்காரன்கோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் தேங்காய் துருவியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நகைக்காக நடந்த கொடூரமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தனியாக இருந்த பெண்

குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே சி.எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அவருடைய மனைவி லலிதா (வயது 35). இவர்களுக்கு அஜேஸ் (19), அஜித் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜேஸ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். 2–வது மகன் அஜித் பூதப்பாண்டி அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

இளையபெருமாள் தினமும் அதிகாலையில் பால் வெட்ட செல்வது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவர் வேலைக்கு சென்றார். இளைய மகன் அஜித் டியூசன் படிப்பதற்காக சென்றார். லலிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் அதிகாலையில் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்.

கொலை

இந்தநிலையில் டியூசன் முடிந்து வீட்டுக்கு அஜித் வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அங்கு சமையல் அறையில் லலிதா கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த அஜித் அலறினார். அக்கம் பக்கத்தினரிடம் சென்று கூறினார். உடனே அவர்கள் அனைவரும் அங்கு ஓடிவந்தனர்.

இதுகுறித்து கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நகைகள் மாயம்

லலிதாவின் தலை மற்றும் உடலில் பல பகுதியில் கட்டையால் ஓங்கி அடித்த காயங்கள் இருந்தன. அவரது அருகில் ரத்தம் படிந்த நிலையில், மரக்கட்டையுடன் கூடிய தேங்காய் துருவி கிடந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல் என மொத்தம் 5¼ பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.

லலிதா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை பறிக்க முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் தேங்காய் துருவி கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு நகையை பறித்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

பரபரப்பு

இதனை தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, சற்று தூரத்தில் உள்ள டீக்கடை வரை ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து லலிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக லலிதாவின் கணவர் இளையபெருமாள், மகன் அஜித் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்துக்காக கொன்றுவிட்டு கொலையை திசை திருப்புவதற்காக மர்மநபர்கள் நகையையும் பறித்துச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு புகுந்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்