ஒன்றியக்குழு வார்டு நீக்கம்: பொதுமக்கள் திடீர் சாலை மறியல் கடைகள் அடைப்பு

லாலாப்பேட்டையில் மறு சீரமைப்பின் போது லாலாப்பேட்டை ஒன்றியக்குழு வார்டு நீக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-05 22:30 GMT

சிப்காட் (ராணிப்பேட்டை),

வாலாஜா ஒன்றியத்தில் உள்ள லாலாப்பேட்டை ஊராட்சியுடன் மருதம்பாக்கம் ஊராட்சியை இணைத்து ஒரு ஒன்றியக்குழு உறுப்பினரை இதுவரை தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டதால் லாலாப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டு நீக்கப்பட்டது.

லாலாப்பேட்டையில் உள்ள 9 வார்டுகளில் 1,2,3 ஆகிய வார்டுகள் முகுந்தராயபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டிலும், 4,5,6,7,8,9 ஆகிய வார்டுகள் சீக்கராஜபுரம் வார்டிலும் தற்போது மறு சீரமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் லாலாப்பேட்டைக்கு வார்டு என்பது தனியாக இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.

சுற்றுவட்டார பகுதிகளின் மையப்பகுதியாக உள்ள லாலாப்பேட்டை ஊராட்சியுடன் மற்ற வேறு பகுதிகளை இணைத்தோ அல்லது லாலாப்பேட்டையை ஒட்டு மொத்தமாக வேறு பகுதியுடன் இணைத்தோ ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லாலாப்பேட்டை பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே மனுஅளிக்கப்பட்டது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று காலை லாலாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் லாலாப்பேட்டை– பொன்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஒட்டு மொத்தமாக கடைகள் அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவலறிந்த வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலில் லாலாப்பேட்டையில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த சாலை மறியலால் லாலாப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்