பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 60 பேர் கைது

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-01-06 04:45 IST

திருச்சி,

மதுரை விமானநிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியை கண்டித்து திருச்சியில் நேற்று புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அப்போது கட்சியினர் கையில் பிடித்திருந்த சுப்பிரமணியசாமியின் முழு உருவப்படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து உருவப்படத்தை கைப்பற்றினர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 25 பேரை கைது செய்து குண்டு கட்டகாக வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதைப்போன்று தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சுப்பிரமணியசாமியை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இந்நிலையில் திடீரென்று சுப்பிரமணியசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருப்படத்தை கைப்பற்றினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்று அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்