தூத்துக்குடி மாவட்டத்தில் 2–வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்கள் கடும் அவதி

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், 2–வது நாளாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Update: 2018-01-05 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், 2-வது நாளாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

வேலைநிறுத்தம்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக நேற்று முன்தினம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 13 தொழிற்சங்கங்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இதனால், அன்று இரவு சில வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பஸ்கள் இயங்கவில்லை

தூத்துக்குடி மாவட்டத்தில், நேற்று காலையில் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 7 டெப்போக்களில் பணியாற்றும் பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இருந்தபோதிலும், பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும், காலையில் பஸ்களை இயக்க முடியவில்லை.

அதிகாரிகளின் தீவிர முயற்சியால், நேற்று மதியம் 12 மணி அளவில் தூத்துக்குடி நகர பஸ் டெப்போவில் உள்ள 62 பஸ்களில் 8 பஸ்களும், புறநகர் டெப்போவில் உள்ள 52 பஸ்களில் 14 பஸ்கள் மட்டும் இயங்கின. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 70 பஸ்களில் ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பலர் ரெயில் மூலம் வெளியூருக்கு சென்றனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 70 பஸ்கள் உள்ளன. இதில் 9 டவுன் பஸ்கள் மட்டுமே நேற்று கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டன. மற்ற அனைத்து பஸ்களும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

ரெயில்களில் கூட்டம்


பெரும்பாலானவர்கள் ரெயில்களில் பயணம் செய்ததால், அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கோவில்பட்டி பஸ் நிலையங்களில் இருந்து தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 38 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களும், கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் பலமணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டன. இதனால், நீண்டநேரம் காத்து கிடந்து பயணம் செய்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 6 பஸ்களில் 5 பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவில்- திருச்செந்தூர் வழித்தடத்தில் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. சாத்தான்குளம்- நெல்லை வழித்தடத்தில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 55 பஸ்களில் 30 பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களை நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கினர். நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், அந்தபகுதி பயணிகள் அவதி அடைந்தனர். பெரும்பாலானவர்கள் ரெயில்களில் பயணம் செய்ததால், அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 34 பஸ்களில் நேற்று காலையில் 30 பஸ்கள் இயக்கப்பட்டன. பின்னர் மதியம் பெரும்பாலான பஸ்கள் பணிமனைக்கு திரும்பின. தொடர்ந்து 4 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போக்களில் உள்ள 314 பஸ்களில் 69 பஸ்கள் மட்டும் இயங்கின. அனைத்து பகுதியிலும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

கல்வி நிறுவனங்களின் டிரைவர்களுக்கு அழைப்பு


இதைத் தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்கவும், நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மினிபஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. தனியார் வசம் உள்ள ஆம்னி பஸ்களையும் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் உள்ள பஸ்களை இயக்கி வரும் டிரைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால், அதிக அளவில் டிரைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 50 டிரைவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மூலமும் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்