முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தல்

முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2018-01-05 22:45 GMT

அய்யம்பேட்டை,

பாபநாசம் வட்டார உலமா சபை, ஜமாத் சபையினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் முத்தலாக் தடை மசோதா எதிர்ப்பு கண்டன கூட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜாரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாத் சபை துணைத்தலைவர் பி.எம்.ஜியாவுதீன் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் இனையத்துல்லா, ஜமாத் சபை தலைவர்கள் முகமதுநஜிப், அக்பர்பாட்சா ஆகியோர் பேசினர். இதில் பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி, வழுத்தூர், சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதிகோவில், வடக்குமாங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஜமாத்தார்கள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவை வன்மையாக கண்டிப்பது. இஸ்லாமியர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே மத்திய அரசு முத்தலாக் தடை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். பாராளுமன்ற மரபுகளுக்கு எதிராக அவசர கதியில் கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்ககூடாது.

மத்திய அரசு இந்திய நாட்டின் இறையாண்மையை கேள்விகுறியாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவைக்கு தனியான சட்டங்கள் உண்டு. இவற்றில் தலையிடுவதன் மூலம் மத்திய அரசு தன்னுடைய ஒற்றை கலாசார திட்டத்தை திணிக்க முயற்சிப்பதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் அய்யம்பேட்டை தலைமை இமாம் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.ம்.

மேலும் செய்திகள்