ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் பயணிகள் அவதி

ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-01-04 22:30 GMT
ஈரோடு,

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோட்டில் நேற்று இரவு 7 மணிஅளவில் போராட்டம் தொடங்கியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பிறகு டிரைவர்கள் பணிமனைக்கு பஸ்களை கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். ஆனால் சில அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.

அரசு பஸ்கள் ஓடாது

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா கூறும்போது, “ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்திலும் இரவில் இருந்தே பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடுவழியில் பஸ்களை நிறுத்தாமல் பஸ் நிலையங்களுக்கு சென்று இறக்கி விடப்பட்டது. அதன்பின்னரே டிரைவர்கள் பஸ்களை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர். நாளை (அதாவது இன்று) முதல் அரசு பஸ்கள் ஓடாது”, என்றார். 

மேலும் செய்திகள்