மங்களூருவில் பா.ஜனதா தொண்டர் கொலை: போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவரும்

மங்களூருவில் நடந்த பா.ஜனதா தொண்டர் கொலை சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Update: 2018-01-04 21:45 GMT

பெங்களூரு,

மங்களூருவில் நடந்த பா.ஜனதா தொண்டர் கொலை சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

கர்நாடக போலீஸ் துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கொலைக்கான காரணம்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று(அதாவது நேற்று முன்தினம்) தீபக்ராவ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கொலையாளிகள் தப்பிச்சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அதில் 2 பேரை போலீசார் பிடித்துவிட்டனர். உள்ளே இருந்த மற்ற 2 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மொத்தம் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். கொலையானவர் தங்களின் கட்சி தொண்டர் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது இன்று(அதாவது நேற்று) மாலைக்குள் தெரியவரும். இந்த கொலை சம்பவத்தை நான் கண்டிக்கிறேன்.

தவறான தகவலை பரப்புகிறார்கள்

இது ஒருபுறம் இருக்க கொலையானவரின் குடும்பத்தினர் நிவாரணம் வழங்குமாறு கோருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதை ஏற்று சித்தராமையா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். யார் கொலை செய்யப்பட்டாலும் பா.ஜனதாவினர் உடனே அவர் தங்கள் கட்சி என்றோ அல்லது இந்துமத அமைப்பை சேர்ந்தவர் என்றோ சொல்கிறார்கள்.

கர்நாடகத்தில் பா.ஜனதா மற்றும் இந்துமத அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதுவரை 19 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள். இது தவறான தகவல். பா.ஜனதா உள்பட அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் 11 பேர் மட்டுமே கொலை செய்யப்பட்டு உள்ளனர். முஸ்லிம் அமைப்புக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பா.ஜனதாவினர் தவறான தகவலை பரப்புகிறார்கள்.

சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சவனூர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க முஸ்லிம் அமைப்புடன் பா.ஜனதா கட்சி ரகசிய கூட்டு வைத்து வெற்றி பெற்றது. ஷோபா எம்.பி.யின் சொந்த ஊர் சவனூர். அந்த முஸ்லிம் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டியது தானே. மத்தியில் பா.ஜனதா அரசு தான் உள்ளது. நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதில் தயவு தாட்சண்யத்திற்கு இடம் இல்லை. தேசிய புலனாய்வு விசாரணை வேண்டும் என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள். நமது மாநிலத்தில் திறமையான போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவார்கள். இதற்கு முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மரணம் தற்கொலை என்று மாநில போலீஸ் கூறியது. இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பா.ஜனதாவினர் கேட்டனர்.

அரசியல் ஆதாயத்திற்காக...

சி.பி.ஐ. விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டோம். அந்த விசாரணையில் அது தற்கொலை தான் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜனதாவினர் அரசியல் ஆதாயத்திற்காக ஒவ்வொரு கொலையையும் அரசியல் ஆக்குகிறார்கள். அவர்கள் மட்டுமே இந்துக்கள் அல்ல. நாங்களும் இந்துக்கள் தான். பா.ஜனதாவினர் மதக்கலவரத்தை தூண்டி விடுகிறார்கள்.

தற்போது மங்களூருவில் அமைதி நிலவுகிறது. எந்த வன்முறை சம்பவமும் நடைபெறவில்லை. தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் உயர் அதிகாரி கமல்பந்தை மங்களூருவுக்கு அனுப்பி இருக்கிறேன்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்