இந்து அமைப்பினர் கொலை: முதல்–மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்

இந்து அமைப்பினர் கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்–மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது.

Update: 2018-01-04 21:45 GMT

பெங்களூரு,

இந்து அமைப்பினர் கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்–மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது.

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அரசு தடுக்கவில்லை

மங்களூருவில் பா.ஜனதா தொண்டர் தீபக் ராவ் கொலை செய்யப்பட்டு உள்ளார். இத்துடன் சேர்த்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மொத்தம் 24 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது.

கர்நாடகத்தில் மக்கள் அரசு உள்ளதா? அல்லது தலிபான் மாதிரியான அரசு இருக்கிறதா?. இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டாலும், அதில் தொடர்பு உடையவர்கள் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய சம்பவங்களை நடைபெறாமல் அரசு தடுக்கவில்லை. இந்த சம்பவங்களை அரசு மென்மையாக கையாண்டு வருகிறது.

மன்னிப்பு கோர வேண்டும்

கடந்த 2015–ம் ஆண்டு 175 பேர் மீது இருந்த வழக்குகளை இந்த அரசு வாபஸ் பெற்றது. அதன் பிறகு தான் இந்து அமைப்பினர் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. தங்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற்றுவிடுகிறது என்ற மனநிலை அவர்களின் மனதில் வந்துவிட்டது. இதை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தினால் அரசியல் செய்வதாக அரசு குறை கூறுகிறது.

பெங்களூரு மாநகராட்சியில் எஸ்.டி.பி.ஐ. அமைப்புடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்து உள்ளது. அந்த அமைப்புக்கு சுகாதார நிலைக்குழு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு காங்கிரஸ் அரசு உதவி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அமைப்புடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதற்காக கர்நாடக அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

சித்தராமையா பதவி விலக வேண்டும்

எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளை தடை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்ய தயங்குவது ஏன்?. இதுபற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். 175 பேர் மீது போடப்பட்டு இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் கொலைகளுக்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலக வேண்டும். இந்த தீபக்ராவ் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

மேலும் செய்திகள்