திண்டுக்கல் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நடிகர் சசிக்குமார்

திண்டுக்கல் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நடிகர் சசிக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-01-04 23:00 GMT
திண்டுக்கல்,

தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மக்களை பங்குபெற வைக்கும் வகையில் ஒவ்வொரு மாநகராட்சி சார்பிலும் பிரபலமான நபர்கள் தூதுவராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான சசிக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி இன்று (வெள்ளிக் கிழமை) அறிமுக விழா நடக்கிறது. இதில் நடிகர் சசிக்குமார் தூதுவராக கலந்து கொண்டு, தூய்மை இந்தியா திட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார். இதற்கான ஏற்பாடுகளை கமிஷனர் மனோகர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி நகர்நல அலுவலர் அனிதா கூறுகையில், திண்டுக்கல் நகரில் பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் இருக்க குப்பை தொட்டிகள் நிறைய வைத்துள்ளோம்.

மேலும் குப்பை கொட்டும் இடமாக இருந்த சாலை சந்திப்புகளில் ஓவியங்கள் வரைந்தும், மரக்கன்றுகள் நட்டும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, மக்கள் குப்பைகளை தெருக் களில் எறியாமல் துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து கொடுக்க வேண்டும். மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக தயாரிக்கலாம். அதேபோல் வீடுகள் தோறும் கழிப்பறை கட்ட வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்காக மாநகராட்சி சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதை தீவிரப்படுத்தும் நோக்கில் நடிகர் சசிக்குமார் தூதுவராக தேர்வு செய்து இருக்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தில் மக்கள் பங்கெடுத்து நகரை தூய்மையாக வைக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்