அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மகன் உள்பட 3 பேர் கைது

நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக தந்தையை கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-01-04 23:00 GMT
நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). அ.தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர். இவருக்கு சொந்தமான நிலம் நடுவீரப்பட்டு அருகே உள்ள வாண்ட்ராசன்குப்பத்தில் உள்ளது. கடந்த 30-ந் தேதி இரவு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிருஷ்ணமூர்த்தி தனது வயலுக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் அந்த கொட்டகைக்குள் புகுந்து, கிருஷ்ணமூர்த்தியை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இது குறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தியின் மகன் தியாகராஜன் (32) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தியாகராஜனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிருஷ்ணமூர்த்தியின் 2-வது மனைவி ராணியின் தூண்டுதலின் பேரில் தியாகராஜன், அவரது நண்பரான திருச்செந்தூரை சேர்ந்த இப்ராகிம் (38) ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை கொன்றது தெரியவந் தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைதான தியாகராஜன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நான் வீட்டைவிட்டு வெளியேறி திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து பிழைத்து வந்தேன். அங்கு இப்ராகிம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து, எனது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் செலவுக்காக பணம் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்தார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த எனது சித்தி ராணி, பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடு, அப்பதான் சொத்தில் பங்கு கிடைக்கும் என்றார். இதையடுத்து நானும், எனது நண்பன் இப்ராகிமும் மோட்டார் கொட்டகையில் தனியாக இருந்த எனது தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து திருச்செந்தூருக்கு சென்று தலைமறைவாக இருந்தோம். இருப்பினும் போலீசார் விசாரணையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்