கும்மிடிப்பூண்டி அருகே சவுக்கு கட்டைகள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
கும்மிடிப்பூண்டி அருகே சவுக்கு கட்டைகள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து நேற்று சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை அடுத்த செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை நெல்லூரைச்சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ்(வயது30) ஓட்டி வந்தார். அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக சவுக்கு மரக்கட்டைகள் ஏற்றப்பட்டு இருந்தது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்தபோது அதிக பாரம் காரணமாக திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சிமெண்ட் தடுப்பையொட்டி சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த சவுக்கு மரக்கட்டைகள் மறுபுறத்தில் உள்ள சாலையில் மலைபோல ரோட்டில் அப்படியே சரிந்து விழுந்தன.
இதனால் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.