வாலிபர் கொலை வழக்கு: மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

வாலிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-01-04 23:00 GMT
பொன்னேரி,

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் மம்மாரா கிராமத்தை சேர்ந்தவர் அனிமாதெப்நாத் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுதிப்தேவ்நாத் (27) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்பிதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுதிப்தேவ்நாத்தின் நண்பர் நிர்மல்சர்கார் (28). இவர் அடிக்கடி சுதிப்தேவ்நாத் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது நிர்மல்சர்காருக்கும் அனிமாதெப்நாத்க்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. பின்னர் அனிமாதெப்நாத் கணவரை பிரிந்து நிர்மல்சர்காருடன் சில்சர் என்ற பகுதியில் குடியேறினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் செங்குன்றம் பள்ளிக்குப்பம் பாலவாயல் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

கொலை

அனிமாதெப்நாத் இருக்கும் இடத்தை அறிந்த கணவர் சுதிப்தேவ்நாத் மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். கணவருடன் செல்ல மறுத்த அவர் விவாகரத்து வழங்கும்படி கணவரை கேட்டார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அனிமாதெப்நாத், கள்ளக்காதலன் நிர்மல்சர்கார் இருவரும் சேர்ந்து சதி திட்டம் தீட்டி சுதிப்தேவ்நாத்தை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்து கோணியில் மூட்டையாக கட்டி வீட்டுக்கு அருகே கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் அருகே இருந்த புதரில் வீசி விட்டு இருவரும் திரிபுரா மாநிலத்திற்கு சென்று விட்டனர்.

ஆயுள் தண்டனை

அங்கு கிடைத்த செல்போனின் விவரத்தை வைத்து அனிமாதெப்நாத், நிர்மல்சர்கார் இருவரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு பொன்னேரி கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அனிமாதெப்நாத், நிர்மல்சர்கார் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதித்து பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 

மேலும் செய்திகள்