ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆவின் ‘பூத்’, அம்மா குடிநீர் நிலையம் அகற்றம்
ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆவின் பால் ‘பூத்’, அம்மா குடிநீர் நிலையத்தை அகற்றி போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை தமிழக-ஆந்திர எல்லையில் உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி, கடப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும்.
பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல ஒரே வழி தான் உள்ளது. மேலும் இங்குள்ள சாலையோர கடைகளால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தையொட்டி ஆவின் பால் ‘பூத்’, அம்மா குடிநீர் விற்பனை நிலையம் உள்ளன. இதனாலும் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
அகற்றம்
இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கிகரவர்த்தி நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை வந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை பார்வையிட்டார். விரைவில் அவை அகற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆவின் பால் ‘பூத்’, அம்மா குடிநீர் நிலையத்தை உடனே அகற்ற வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். ஊத்துக்கோட்டைக்கு நேற்று மாலை மீண்டும் அவர் வந்தார். அவருடைய முன்னிலையில் ஆவின் ‘பூத்’, அம்மா குடிநீர் நிலையத்தை போலீசார் அகற்றினர்.
‘சிக்னல்’
அப்போது போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ‘சிக்னல்கள்’ 15 நாட்களில் நிறுவப்படும் என்றார்.
அப்போது மது விலக்கு கூடுதல் சூப்பிரண்டு தில்லை நடராஜன், ஊத்துக்கோட்டை துணை சூப்பிரண்டு சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.