படாளம், திருவாலங்காட்டில் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்

படாளம், திருவாலங்காட்டில் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-04 22:30 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.13 கோடியை வழங்காத தமிழக அரசையும், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தையும் கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில விஜயகாந்த் மன்ற செயலாளர் அன்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் படாளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் வரதன், மாவட்ட பொருளாளர் இ.சி.ஆர்.ஜெயராஜ், மீனவர் அணி துணை செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவாலங்காடு

திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரைஆலைக்கு தாங்கள் உற்பத்தி செய்த கரும்புகளை வழங்கி வந்தனர். அதற்காக அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை இதுவரை வழங்கப்பட வில்லை. இதை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப் பட்டது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மாவட்டசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் நல்லதம்பி. திருவாலங்காடு ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் சரவணன், மாவட்டபொருளாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.22 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

தே.மு.தி.க.வினரின் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்