செம்மண் கடத்திய 5 டிப்பர் லாரிகள் பறிமுதல் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிப்பு

எடப்பாடி அருகே செம்மண் கடத்திய 5 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2018-01-04 22:45 GMT
எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு மற்றும் ஆடையூர் பகுதிகளில் உள்ள பட்டா நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் அரசு அனுமதியின்றி செங்கல்சூளைகளுக்கு செம்மண் அள்ளி கடத்தப்படுவதாக சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு உதவி கலெக்டர் ராமதுரைமுருகன் தலைமையில் எடப்பாடி தாசில்தார் கேசவன், வருவாய் ஆய்வாளர் செங்கோட்டையன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு மதுரகாளியம்மன் கோவில் அருகே பட்டா நிலம் மற்றும் ஓடை புறம்போக்கு நிலத்தில் சிலர் செம்மண் அள்ளிக்கொண்டு இருந்தனர்.

உடனே அதிகாரிகள், அங்கு சென்று செம்மண் அள்ளி கடத்த பயன்படுத்திய 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த லாரிகள், ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடை பகுதியை சேர்ந்த குமாரசாமி, சின்னப்பம்பட்டியை சேர்ந்த செங்கோட்டையன், கரிக்காபட்டியை சேர்ந்த தங்கவேல், துட்டம்பட்டியை சேர்ந்த தங்கவேல் ஆகியோருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 5 டிப்பர் லாரிகளையும் அதிகாரிகள் எடப்பாடி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். மேலும், அந்த லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரத்து 400 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்