புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் கிடக்கிறது போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் தென்காசி

புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளதால் தென்காசி நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.

Update: 2018-01-04 21:15 GMT

தென்காசி,

புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளதால் தென்காசி நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தென்காசி நகரம்

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான நெல்லைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரம் தென்காசி. நகரசபையாக செயல்படும் இங்கு 33 வார்டுகள் உள்ளன. தற்போது சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலம், தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சீசன் காலங்களில் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.

சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் நீராடி விட்டு தான் செல்கிறார்கள். இங்கு பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி கோவிலும் உள்ளது. இந்த கோவிலுக்கும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெருக்கடி

தென்காசியை அடுத்த செங்கோட்டையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநில எல்லை தொடங்குகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் தென்காசி வந்துதான் மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள். இதுதவிர பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்டவைகளுக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

எனவே தென்காசி நகரம் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த நகரமாக மாறி விட்டது. போக்குவரத்து அதிகமாக அளவுக்கு சாலை வசதி இல்லை என்பதுதான் வேதனை தரக்கூடிய ஒன்று. ஆம்! பல ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி நகரில் எப்படி சாலைகள் இருந்தனவோ, அதே அளவுக்குதான் இப்போதும் சாலைகள் உள்ளன.

குறிப்பாக சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், நான்கு ரதவீதிகள், கூலக்கடை பஜார், பழைய பஸ் நிலையம், சம்பா தெரு, அணைக்கரை தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில் அன்றைக்கு இருந்தது போன்றே இன்றும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதனால் அவசரமாக ஆஸ்பத்திரி, பஸ் நிலையம், ரெயில் நிலையம் செல்பவர்களும், அலுவல் காரணமாக அலுவலகங்கள், வங்கிகளுக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ– மாணவிகளின் வாகனங்களும் இந்த நெருக்கடியில் சிக்கி கொள்கின்றன.

புறவழிச்சாலை திட்டம்

இந்த போக்குவரத்து நெருக்கடி தீர்வு காண புறவழிச்சாலை திட்டம் ஒன்று தயாரானது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்குவதாக இருந்தது. ஆனால் எந்த காரணமோ தெரியவில்லை. அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தென்காசி தப்பித்துக் கொள்ளும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுதவிர பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள், சாலையோரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்துதல், மாடுகளை ரோட்டில் திரிய விடுதல், சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்குதல் உள்ளிட்ட காரணங்களாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. இதற்கு எல்லாம் நிரந்தர தீர்வு என்ன? என்பதை அதிகாரிகள் யோசிப்பது இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு?

தென்காசி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என நகரசபை நிர்வாகம் தனது பணிகளை முறையாக செய்தாலே போக்குவரத்து நெருக்கடி குறையும் என்பது ஒரு தீர்வு. சாலையில் ஆங்காங்கே போக்குவரத்து போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒருவழி சாலையையில் வாகனங்கள் செல்வதை முறைப்படுத்த வேண்டும். சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஒருசில நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டே போக்குவரத்து நெருக்கடி ஓரளவு குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தென்காசி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் புறவழிச்சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக தற்காலிகமாக ஒருசில நடவடிக்கைகளை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.

லாரிகளால் ஏற்படும் நெருக்கடி

தென்காசி நகரில் உள்ள கடைகளுக்கு வெளியூர்களில் இருந்து லாரிகள் மூலம் சரக்குகள் கொண்டு வரப்பட்டு பகல் நேரங்களில் சரக்குகள் இறக்கப்படுகின்றன. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் இந்த சரக்கு லாரிகளால் போக்குவரத்து அதிகரிக்கிறது. எனவே சரக்குகளை இறக்குவதற்கு லாரிகளுக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கினால் போக்குவரத்து நெருக்கடியை ஓரளவு தீர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் செய்திகள்