“திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்” கமிஷனர் அலுவலகத்தில் திருட்டு வழக்கு கைதி மனு
திருந்தி வாழ ஆசைப்படுவதாக கூறி, திருட்டு வழக்கு கைதி ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னை,
மனு கொடுத்துள்ளவரின் பெயர் அல்போன்ஸ் (வயது 48). சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர். இவர் நேற்று தனது மனைவி ஞானத்துடன் (45) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அதிகாரிகளை சந்தித்து தனது மனைவி பெயரில் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் சிறு வயதிலேயே குடிப்பழக்கத்துக்கு அடிமையானேன். இதனால் திருட்டு தொழில் என்னோடு வந்து விட்டது. 2001-ம் ஆண்டு முதல் வீடுகளில் புகுந்து சிறிய அளவில் நகைகளை திருடினேன். கதவை சாத்திவிட்டு, பெண்கள் பாத்ரூமில் குளிக்கும்போது நைசாக வீட்டிற்குள் சென்று நகை மற்றும் கையில் கிடைக்கும் பொருட்களை திருடிச் சென்று விடுவேன்.
திருந்தி வாழ ஆசை
முதன்முதலாக பட்டாபிராமில் ஒரு வீட்டில் தான் திருட்டை தொடங்கினேன். போலீசார் இதுவரை என் மீது 30 வழக்குகள் போட்டுள்ளனர். என்னை கைது செய்து 10 முறை புழல் ஜெயிலுக்கு அனுப்பியுள்ளனர். 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அத்தனை வழக்குகளிலும் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து விட்டேன். சிறை வாழ்க்கை எனக்கு வெறுத்து விட்டது. இப்போது திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் என்னை போலீசார் வாழ விடவில்லை. ஒரு வழக்கில் சிக்கினால் 5 பொய் வழக்குகளை என் மீது போட்டு விடுகிறார்கள்.
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ‘நீ திருந்தி என்ன செய்யப்போகிறாய்?’ என்று கேட்கிறார். கடைசியாக குண்டர் சட்டத்தில் சிறைக்கு போய்விட்டு கடந்த செப்டம்பர் மாதம் வெளியில் வந்தேன்.
வாழ விடுங்கள்
வெளியில் வந்தவுடன் கொடுங்கையூர் போலீசார் என்னை பிடித்துச் சென்று விட்டனர். எந்த குற்றமும் செய்யாமல் என் மீது பொய் வழக்கு போடப்பார்க்கிறார்கள். எனது மனைவி வீட்டு வேலை செய்து 3 மகன்களை படிக்க வைத்துள்ளார். மூத்த மகன் பிளஸ்-2 படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்ற 2 மகன்களும் 10-வது வரை படித்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள்.
எனது குடும்பத்தினர் மற்றும் மகன்கள் என்னை சேர்க்க மறுக்கிறார்கள். எனது தாயார் மட்டுமே ஆதரவுக்கரம் நீட்டி வந்தார். அவரும் தற்போது என்னை சேர்க்க மறுக்கிறார். எனது மனைவியை கெஞ்சிக்கேட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளேன். என்னை வாழ விடுங்கள் என்று கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டேன். போலீஸ் கமிஷனரை பார்க்க அனுமதி மறுத்து விட்டார்கள்.
எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும் என்பதால் ஆட்டோ ஓட்டி பிழைத்துக்கொள்வேன். இனிமேல் திருட்டு தொழிலை செய்யமாட்டேன். போலீசார் என்னை வாழ விட வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.