திருவொற்றியூரில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை
திருவொற்றியூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் அஞ்சுகம் நகர், 2-வது தெருவில் வசித்து வருபவர் ஜான்சன். இவருடைய மனைவி கஸ்தூரி(வயது 35). இவர், சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கஸ்தூரி, வழக்கம்போல் வேலை முடிந்து மின்சார ரெயிலில் விம்கோநகர் ரெயில் நிலையம் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 மர்மநபர்கள் திடீரென கஸ்தூரி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் கஸ்தூரி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயம் அடைந்தார். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.