தூத்துக்குடியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Update: 2018-01-04 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தூத்துக்குடி ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பூபதி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், முத்தையாபுரம் பகுதி செயலாளர் கருணாகரன், முன்னாள் இளைஞர் அணி துணை செயலாளர் ஜெகன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;–

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது. ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை ஆள நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் பழிக்காது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். யாருக்கு சீட் கொடுத்தாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். நம் கட்சியினரை வெளியே குறைத்து பேச வேண்டாம். ஒன்றியம் வாரியாக சிறந்த பேச்சாளர்களை கொண்டு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி அல்ல. மூட நம்பிக்கைகளுக்கு தான் எதிரி. இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள்

அதனை தொடர்ந்து கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தைமாதம் முழுவதும் கழக செயல்வீரர்களை பொதுமக்களை பெருமளவில் திரட்டி பொங்கல் வைத்து கழக கொடியேற்றிட வேண்டும். ஒகி புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கும், புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கும் அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புயலில் சிச்கி படகு, வலைகள், மீன்பிடி கருவிகளை இழந்த மீனவர்களுக்கு அவர்கள் மீண்டும் தொழில் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும், மத்திய அரசும் செய்திட வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், ஒன்றிய கழக செயலாளர்கள் செங்குழி ரமேஷ், நல்லமுத்து, ஜோசப், ரவி, பாலசிங், மகாராஜன், சண்முகையா, வைகுண்டபாண்டியன், நவின்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்