விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் கேட்டு 3-வது நாளாக சத்தியாகிரகம் நீடிப்பு

ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தக்கலை அருகே நேற்று 3-வது நாளாக சத்தியாகிரக போராட்டம் நீடித்தது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-01-04 22:45 GMT
தக்கலை,

குமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலில் ஏராளமான விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். புயல்பாதித்த அனைவருக்கும் சம இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கடந்த 2-ந் தேதி முதல் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த போராட்டம் கடந்த 2 நாட்களாக இரவு- பகலாக நடந்து வந்தது. இதில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

3-வது நாளாக...

நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்தநிலையில் போராட்ட பந்தலின் அருகே அரசியல் கட்சியினர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

*வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தகுந்த நிவாரணம் வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் மாவட்டம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன், ம.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்