வங்கியில் நம் பணம் பாதுகாப்பானதா?

நாம் ஈட்டும் வருவாயை முழுக்கச் செலவிடுவதில்லை. அதிக வருவாய் உள்ளவர்களுக்கு இயல்பாக சேமிப்பு இருக்கும். மற்றவர்கள் வயிற்றை கட்டி, வாயை கட்டி தேவைகளை சுருக்கி சேமிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் எதிர்கால தேவை, நோக்கம் இருக்கும். மிகுதியாக சேமிப்பவர்கள் தொழிலில், பிற வழிகளில் முதலீடு செய்யலாம்.

Update: 2018-01-04 06:30 GMT
-டாக்டர் மா.பா. குருசாமி

குறிப்பாக நடுத்தர மக்கள் வங்கிகளில்தான் நடைமுறை கணக்கில் அல்லது கால வைப்பு நிதியாக வைத்திருப்பார்கள். அதற்கு 3 காரணங்கள் கூறலாம். ஒன்று வங்கியில் போட்டு வைக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். இரண்டு எப்பொழுது வேண்டுமானாலும் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம். மூன்று, அதன் மூலம் வருவாய் (அதாவது வட்டி) கிடைக்கும்.

இப்பொழுது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிதிசார் வைப்பு நிதி காப்பீடு மசோதா ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. இது நாடாளுமன்றத்தின் ஆய்வில் இருக்கிறது. இது விரைவில் சட்டமாகலாம். இதிலுள்ள சில விதிமுறைகள் பொதுமக்களின் சேமிப்பு பணத்தில் கை வைக்க கூடியவை என்ற செய்திகள் வெளியாவதால், வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பவர்களுக்கு அச்சம் தோன்றியுள்ளது.

இந்த புதிய சட்ட வரைவால் மக்களின் சேமிப்பு பணத்துக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சில விதிமுறைகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வங்கியில் உள்ள தங்கள் பணம் முதலுக்கு மோசம், வட்டிக்கு வாய்தா என்ற நிலைக்கு சென்று விடுமோ? என்று அஞ்சுகின்றனர். அவர்களது நம்பிக்கை தகர்கின்றது.

வரப்போகிற சட்டப்படி, ஒரு வங்கி நெருக்கடி (திவாலாகும்) நிலையில் இருந்தால், மக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை அவர்களது ஒப்புதலின்றியே, குறிப்பிட்ட காலத்திற்கான வைப்பு தொகையாக மாற்றி கொள்ளலாம். அதற்கு வட்டி விகிதத்தை வங்கிகளே தீர்மானிக்கும். எவ்வளவு குறைவாக வட்டி விகிதத்தை தீர்மானிக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் இருக்கின்றது.

கால வைப்பீடுகளில் உள்ள பணத்தை வைப்பாளர்கள் உடனே எடுக்க முடியாது. இந்த வைப்பீடுகளின் கால அளவை கூட்டவும், வட்டி விகிதத்தை குறைக்கவும், இந்த சட்டம் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் வைப்பு நிதியை வங்கிகளின் பங்குகளாக மாற்றி நெருக்கடியை சமாளிக்கும் வழிமுறையும் உள்ளது. இதைத்தான் உள்பிணை என்று கூறுகின்றனர்.

பழைய விதி ஒன்று காப்பீட்டாளர்களை பாதுகாக்க இருக்கிறது. 1961-ல் இந்திய அரசு நிறைவேற்றிய வைப்பு நிதி காப்பீடு சட்டத்தின்படி ஒரு வங்கி கடனில் மூழ்கினால் (திவாலானால்) வைப்பு கணக்கில் பணம் வைத்திருந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், அதற்குரிய வட்டி தொகையும் கிடைக்கும். இந்த காப்புறுதிக்காக வங்கிகள் காப்பீட்டு தொகை செலுத்த வேண்டும். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இந்த காப்பீட்டுத் தொகையாக ரூ.3,000 கோடி செலுத்தியிருக்கின்றன.

சமீப காலத்தில் எந்த வங்கியும் திவாலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கொண்டுவரப்போகிற புதிய சட்ட வரைவில் இந்த ஒரு லட்சம் ரூபாய் காப்பீடும் இல்லை என்கின்றனர். இது சிறு சேமிப்பாளர்களை மிகவும் அச்சுறுத்துகின்றது. இந்த புதிய சட்டத்திற்கு ஒரு பின்னணி இருக்கின்றது.

2008-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வங்கிகள் தாராளமாகவும், ஏராளமாகவும் கடன்களை வாரி வழங்கியதால் நீர்க்குமிழிகள் போல வளர்ச்சி போக்குகள் தோன்றின. கடன் பெற்றவர்களால் கடனை திருப்பி கட்ட முடியாத நிலையில் பல வங்கிகள் முறிந்தன. இந்த நாடுகளில் வங்கிகளை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பாயிற்று. இதன் விளைவாக 2009-ம் ஆண்டில் ஜி20 நாடுகள் ஒன்று கூடி, இப்படிப்பட்ட நிதி நெருக்கடி நிலை ஏற்படுகின்ற பொழுது என்ன செய்ய வேண்டுமென்று வழிகாட்ட நிதித்துறை நிலையாண்மைக்குழு ஒன்றை நிறுவியது.

அந்த குழு வங்கிகள் நிதி நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகும் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று சில வழிகாட்டு வழிமுறைகளை வழங்கியது. இந்தியா அந்த அமைப்பில் ஓர் உறுப்பு நாடு என்பதால் அதன் வழிகாட்டுதலின்படி செயல்படுவது தேவையாகின்றது.

இந்த புதிய சட்ட வரைவின்படி, புதிதாக நிதிசார் தீர்வு குழுமம் ஒன்று உருவாக்கப்படும். இந்த குழுமம் மிகுந்த அதிகாரம் கொண்டதாக செயல்படும். இது வங்கிகள் காப்புறுதி கழகங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதி நிலையை மதிப்பீட்டு அவற்றை கலைப்பது, அது தொடர்பான தீர்மானங்களை உருவாக்குவது ஆகியவற்றை கவனிக்கும்.

இந்த சட்டப்படி ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் நிதிசார் தீர்வு குழுமத்திற்கு சென்று விடும். இதுவரை வைப்பு நிதி காப்புறுதி கழகம், ரூபாய் ஒரு லட்சம் வரை வைப்பு நிதியில் காப்புறுதி கொடுத்ததும் நீக்கப்படும். இந்த சட்டப்படி எந்த வங்கியையும் அதன் நிதி நிலை கருதி கலைக்கும் அதிகாரம் இந்த நிதிசார் தீர்வு குழுமத்திற்கு செல்கின்றது. வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை உள்பிணை என்ற முறையில் வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள இந்த சட்டம் வழிவகை செய்வது வாடிக்கையாளர்களின் அச்சத்தை மிகுதிப்படுத்துகிறது.

நமது நாட்டில் வங்கிகளின் வளர்ச்சி தொடக்க காலத்தில் மிக மெதுவாக இருந்தது. 1913-ம் ஆண்டு முதல் 1960 வரை சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வங்கிகள் முறிந்தன. இதனால் இவற்றில் முதலீடு செய்திருந்த பலர் தங்களது பணத்தை இழந்தனர். இது மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வங்கிகளின் முறிவுக்கான காரணங்களை ஆராய்ந்து, வாடிக்கையாளர்களின் நலனையும், வங்கிகளின் நிலையையும் நிலைநிறுத்தும் வகையில் சட்டம் இயற்றினர். அதன்படி, ஏதாவது ஒரு வங்கி செயல்பட இயலாமல் போனால், அதன் செயல்பாட்டினை நிறுத்தி, அதனை வேறு வங்கியோடு இணைக்கும் நிலை உருவானது. இதனால் இதுவரை யாருக்கும் இழப்பு ஏற்படவில்லை.

1960-க்கு பிறகு கடந்த 57 ஆண்டுகளில் பீகார் வங்கி, பெல்காம் வங்கி, ஹிந்துஸ்தான் கமர்ஷியல் வங்கி, லட்சுமி கமர்ஷியல் வங்கி போன்ற சில வங்கிகள் நெருக்கடிக்குள்ளாயின. இந்த வங்கிகள் எல்லாம் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்ததால் வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவை எல்லாம் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டன.

இப்பொழுது நாட்டில் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள் என மொத்தம் 2,125 வங்கிகளுக்கு மேல் இருக்கின்றன. இவற்றில் மக்கள் முதலீடு செய்திருப்பது சுமார் ரூ.106 லட்சம் கோடி. இதில் சிக்கல் என்னவென்றால் வாராக்கடன் ரூபாய் பத்து லட்சம் கோடியை தாண்டிவிட்டது. பொறுப்பற்ற முறையால் வங்கி நிர்வாகிகள் பெரிய பண முதலைகளுக்கு கடன் களை வாரி வழங்கியதே இதற்கு காரணம்.

வங்கிகள் நாட்டுடமையாக்கம் பெற்ற பிறகு மக்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை கூடியிருக்கிறது. அரசின் காப்புறுதி இருக்குமென்று கருதுகின்றனர். மொத்த வங்கிகளின் வைப்புகளில் 82 சதவீதம் நாட்டுடைமையாக்க பெற்ற வங்கிகளில்தான் உள்ளது. பொதுவாக மக்களிடம், குறிப்பாக நடுத்தர மக்களிடம் அச்சமும், அவநம்பிக்கையும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

அரசு நல்ல நோக்கத்தோடு பண மதிப்பீட்டிழப்பின் மூலம் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மாற்றியிருக்கலாம். ஆனால் தங்களிடமிருந்த பணத்தாள்களை மாற்றவும், புதிய தாள்களை பெறவும் மக்கள் பட்டபாடு கொஞ்சமல்ல. இன்னும் தீரவில்லை. இப்பொழுது வருகின்ற வங்கிச் சட்டம். பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமோ என்ற குழப்பத்தில் வங்கி முதலீட்டாளர்களை மாற்றியுள்ளது.

தங்களது சேமிப்பு குறைவாக இருப்பதால் தொழிலில் முதலீடு செய்ய முடியாமலும், குறுகிய காலத்தில் தேவைப்படுவதால் வங்கிகளை நம்பி வைப்பு நிதியாக வைத்திருப்பவர்கள், தங்களது உடனடி தேவைகளையும், வீடு போன்ற கனவுத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்று கலங்கியுள்ளனர்.

வரைவு நிலையில் உள்ளது சட்டமாக நிறைவேறும் முன்பு மக்களின் நலனை காக்கும் வகையில் திருத்தங்கள் வர வேண்டும். வாராக்கடன்கள் என்று உருவெடுத்திருக்கும் அரக்கனை அழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்யும் வங்கிகள் வளர அரசு விழிப்போடு செயல்பட்டு மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும். வாடிக்கையாளர்கள் வாழ்ந்தால்தான் வங்கிகள் வாழும். வங்கிகள் வாழ்ந்தால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடரும்.

மேலும் செய்திகள்