வி.வி.பி. நகர் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
வி.வி.பி. நகரில் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை.
புதுச்சேரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி குண்டுபாளையம் கிளை கூட்டம் நடந்தது. ராஜா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேது செல்வம், தொகுதி செயலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில் கமிட்டி நிர்வாகிகளாக வெங்கடேசன், மணிமாறன், திருவேங்கடம், ராஜா, ஆறுமுகம் ஆகியோரும், கிளை செயலாளராக வெங்கடேசனும், துணை செயலாளராக மணிமாறனும், பொருளாளராக திருவேங்கடமும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் வி.வி.பி. நகரில் பொதுமக்கள் நலன் கருதி உழவர்கரை நகராட்சி மூலம் சமுதாய நலக் கூடம் கட்டி திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் தற்போது நகராட்சி வீட்டுவரி வசூலிக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது. உடனடியாக சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன் படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். குண்டுபாளையத்தில் பழுதடைந்துள்ள கருமாதி கொட்டகையை சரிசெய்திட வேண்டும்.
குண்டுபாளையத்தில் நகராட்சி பொதுக்கழிப்பிடம் பாழடைந்த நிலையில் உள்ளது இதனை நகராட்சி சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் கட்டணம் வசூல் செய்து வருகிறார்கள். இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன்வாடி மையத்தின் மேல் தளத்தில் நூலகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.