வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு, பறவைகளை தத்தெடுத்த பாரத ஸ்டேட் வங்கி
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு மற்றும் சில பறவையினங்களை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தத்தெடுத்தனர்.
வண்டலூர்,
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் நிகழ்வு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. வன உயிரினங்களின் பாதுகாப்பு அவசியம் பற்றி அறிந்து கொள்ளவும், வன உயிரினங்களின் மேல் பற்று ஏற்படவும், அதனை ஊக்குவிப்பதற்காகவும் இந்த திட்டம் பூங்காவில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வகையில் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு மற்றும் புறா, மயில், கிளி போன்ற சில பறவையினங்களை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் நேற்று தத்தெடுத்தனர். இந்த விலங்குகள், பறவைகளுக்கு ஒரு வருடத்திற்கான உணவு செலவை ஏற்று அதற்குரிய தொகை 1 லட்சத்து 99 ஆயிரத்து 733 ரூபாய்க்கான காசோலையை பூங்கா அதிகாரியிடம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் நேரில் வழங்கினர்.