மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு
மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி, புதிய இடஒதுக்கீட்டால் பா.ஜ.க.–ஜனதாதளம் (எஸ்) கூட்டணியிடம் இருந்து பறிபோகிறது.
மைசூரு,
மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி, புதிய இடஒதுக்கீட்டால் பா.ஜ.க.–ஜனதாதளம் (எஸ்) கூட்டணியிடம் இருந்து பறிபோகிறது. இதன் மூலம் மேயர், துணை மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
மைசூரு மாநகராட்சிகர்நாடகத்தில் பெங்களூருவை அடுத்து பெரிய மாநகராட்சியாக மைசூரு மாநகராட்சி விளங்குகிறது. 65 வார்டுகளை கொண்ட மைசூரு மாநகராட்சிக்கு கடந்த முறை நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது, காங்கிரஸ் கட்சி 21 வார்டுகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 20 வார்டுகளிலும், பா.ஜனதா 18 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன. மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி 3 இடங்களிலும், பி.ஆர்.எஸ். காங்கிரஸ் 2 இடங்களிலும், கர்நாடக ஜனதா கட்சி (பா.ஜனதாவில் இருந்து விலகியபோது எடியூரப்பா தொடங்கிய கட்சி) ஒரு இடத்திலும் வெற்றி வாகை சூடியிருந்தன.
இதனால் மேயர், துணை மேயர் தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், பா.ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதன் பலனாக கடந்த 4 ஆண்டுகளாக மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி, ஜனதாதளம்(எஸ்)–பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி வந்தன. இதுவரை மேயர்களாக ராஜேஸ்வரி, ஆர்.லிங்கப்பா, பி.எல்.பைரப்பா, எம்.ஜே.ரவிக்குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆவார்கள். அதேப் போல் துணை மேயர்களாக பா.ஜனதாவை சேர்ந்த சைலேந்திரா, மகாதேவப்பா, வனிதா, ரத்னா ஆகியோர் வகித்தனர்.
காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்புஇந்த நிலையில் மைசூரு மாநகராட்சி 5–வது ஆண்டுக்கான மேயர், துணை மேயர் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில் மைசூரு மாநகராட்சி மேயர் பதவி, ஆதிதிராவிடர் மகளிருக்கும், துணை மேயர் பதவி பழங்குடியின மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது ஜனதாதளம் (எஸ்)–பா.ஜனதா கூட்டணி கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த கூட்டணியில் யாரும் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் இல்லை. இதனால் மேயர், துணை மேயர் பதவிகளை அந்த கூட்டணியிடம் இருந்து பறிபோகிறது.
அதே வேளையில் காங்கிரஸ் கட்சி, மைசூரு மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மேயர் பதவிக்கு காங்கிரசை சேர்ந்த பாக்கியவதி தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. அதேப் போல் துணை மேயர் பதவிக்கு காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர்களான கமலா, இந்திரா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
காங்கிரசார் மகிழ்ச்சிவிரைவில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை காங்கிரஸ் கைப்பற்ற உள்ளதால், அக்கட்சியினர் மகிழ்ச்சியுள்ளனர்.