மகதாயி நதிநீர் பிரச்சினையில் காங்கிரசுக்கு எதிராக நரகுந்து தாலுகாவில் முழு அடைப்பு பஸ்–ஆட்டோக்கள் ஓடவில்லை
மகதாயி நதிநீர் பிரச்சினையில் காங்கிரசுக்கு எதிராக நரகுந்து தாலுகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.;
பெங்களூரு,
மகதாயி நதிநீர் பிரச்சினையில் காங்கிரசுக்கு எதிராக நரகுந்து தாலுகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.
கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளுடன் பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முழு அடைப்பு போராட்டம்மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருடன், பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, குடிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு கோவாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், மகதாயி நதிநீர் பிரச்சினையில் முதல்–மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்வதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டியதுடன், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கதக் மாவட்டம் நரகுந்து தாலுகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் பா.ஜனதாவினர் அழைப்பு விடுவித்திருந்தார்கள். அதன்படி, நேற்று நரகுந்து தாலுகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நரகுந்து தாலுகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடைகள் அடைப்புமுழு அடைப்பையொட்டி நரகுந்து தாலுகாவில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தார்கள். மேலும் காலையில் இருந்தே அரசு, தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை. இந்த நிலையில், ஒரு சில இடங்களில் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தார்கள். உடனே அங்கு சென்ற பா.ஜனதா கட்சியினர், கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் கூறினார்கள்.
ஆனால் கடைகளை அடைக்க வியாபாரிகள் மறுத்தார்கள். இதனால் வியாபாரிகளுக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே வியாபாரிகள், பா.ஜனதாவினரிடம் போலீசார் சமாதானமாக பேசினார்கள். பின்னர் திறந்திருந்த கடைகளை வியாபாரிகள் அடைத்துவிட்டு சென்றார்கள்.
டயர்களுக்கு தீவைப்புகுறிப்பாக நரகுந்து டவுன், சிவாஜி சர்க்கிளில் பா.ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள். சிவாஜி சர்க்கிளில் சாலைகளில் டயர்களை போட்டு பா.ஜனதாவினர் தீவைத்து எரித்தார்கள். அப்போது முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினார்கள்.
முழு அடைப்பையொட்டி பஸ், ஆட்டோக்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் நரகுந்து தாலுகாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக நரகுந்து தாலுகாவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது.