திருவேற்காட்டில் அண்ணி-மாமியார் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
அண்ணி-மாமியாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
திருவேற்காட்டில், அண்ணி-மாமியாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் அண்ணியையும், இதை வெளியில் சொல்லாமல் இருக்க மாமியாரையும் கொன்றதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இரட்டை கொலை
சென்னை திருவேற்காடு கோலடி, அன்புநகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 40). பூ வியாபாரம் செய்து வந்தார். இவர், தனது மகள் தீபா (20), தாயார் பாக்கியம்மாள்(80) ஆகியோருடன் வசித்து வந்தார். மகள் தீபா, அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் 2-ந் தேதி இரவு தீபா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் முனியம்மாள், பாக்கியம்மாள் மட்டும் இருந்தனர். வேலை முடிந்து 3-ந் தேதி மதியம் தீபா வீட்டுக்கு வந்த போது தாய் முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், பாட்டி பாக்கியம்மாள் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியம்மாள், அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கணவரின் தம்பி
அதில், முனியம்மாளின் கணவர் இறந்து விட்டார். அவருடைய தம்பியான ஆட்டோ டிரைவர் பூபாலன்(34) என்பவர் அடிக்கடி தனது அண்ணி வீட்டுக்கு வந்து அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபடுவதும், செலவுக்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததும் தெரிந்தது.
மேலும் அவர், சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணி மற்றும் மாமியாரை கட்டையால் தாக்கி கொலை செய்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொலையாளி பூபாலனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, அவரது புகைப்படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் அவரை பற்றி தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி அவரது புகைப்படம் அச்சிட்ட அறிவிப்பு நோட்டீஸ்களை ஆட்டோ உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் திருவண்ணாமலையில் பூபாலன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், பூபாலனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில், “எனது அண்ணி முனியம்மாள், அந்த பகுதியில் உள்ள ஆண்களிடம் சிரித்து பேசுவார். இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் அதிகரித்தது. எனது செலவுக்கும் பணம் தருவதை நிறுத்தி விட்டதால் ஆத்திரம் அடைந்த நான், அவரது வீட்டுக்கு சென்று கேட்டேன். அப்போது வாக்குவாதம் முற்றியதால் கட்டையால் அவரது தலையில் அடித்து கொலை செய்தேன். நான் வீட்டுக்கு வந்து சென்றதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருக்க மாமியார் பாக்கியம்மாளையும் கட்டையால் தாக்கி கொன்றேன்” என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட பூபாலனை சிறையில் அடைத்தனர்.