குமரியில் இருந்து மீன்பிடிக்க சென்று பலியான மீனவரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனையில் அடையாளம் தெரிந்தது

ஒகி புயலில் பலியான மேலும் ஒரு குமரி மாவட்ட மீனவரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2018-01-03 23:00 GMT
களியக்காவிளை,

கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி குமரி மாவட்டத்தை ஒகி புயல் பயங்கரமாக தாக்கியது. கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் புயல் தாக்கியதில் மாயமானார்கள். மாயமான மீனவர்களை தேடும் பணியில் கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

மாயமான மீனவர்களில் பலர், கேரள மீனவர்களுடன் இணைந்து மீன்பிடிக்க சென்றவர்கள் ஆவர். புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய பல மீனவர்கள் உடல்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கின.

இந்த உடல்கள் மீட்கப்பட்டு திருவனந்தபுரம், கொச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் பல மீனவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே மீட்கப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் கேரள அரசு ஆஸ்பத்திரி பிணவறைகளில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. மேலும், இந்த உடல்களை அடையாளம் காண மாயமான மீனவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த வில்பிரைட்(வயது 55) என்ற மீனவரின் உடல் நேற்று முன்தினம் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.

இந்த தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்து வில்பிரைட் உடலை பெற்றுக்கொண்டனர்.

பின்னர், அவரது உடல் சொந்த ஊரான இரவிபுத்தன்துறைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மேலும், திருவனந்தபுரம் மற்றும் கொச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ள உடல்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்