கத்திப்பாராவில், பொதுமக்களுக்கு பயன்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படும் சுரங்க நடைபாதை

கத்திப்பாராவில் பராமரிப்பின்றி பொதுமக்களுக்கு பயன்படாமல் சமூக விரோதிகளுக்கு கூடாரமாக சுரங்க நடைபாதை செயல்பட்டு வருகிறது.

Update: 2018-01-03 22:15 GMT
ஆலந்தூர்,

கத்திப்பாராவில் பராமரிப்பின்றி பொதுமக்களுக்கு பயன்படாமல் சமூக விரோதிகளுக்கு கூடாரமாக சுரங்க நடைபாதை செயல்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சுரங்க நடைபாதை

சென்னையை அடுத்த ஆலந்தூர் கத்திப்பாராவில் போக்குவரத்து நெரிசலை போக்க கடந்த 2008-ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது ஆலந்தூரில் உள்ள பொதுமக்கள் பட்ரோடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளுக்கு சென்று வர மேம்பாலத்தின் அடியில் 2 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது.

இதில் ஒரு சுரங்க நடைபாதை வாகன போக்குவரத்துக்காக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சுரங்கப்பாதை ஆலந்தூரில் இருந்து கிண்டி, பட்ரோடு போன்ற பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லோடு வேன்கள் பயன்படுத்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு...

மற்றொரு சுரங்க நடைபாதை பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் இருந்தது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த தண்ணீரை நெடுஞ்சாலைத்துறை அகற்றாமல் விட்டுவிட்டனர்.

மேலும் கட்டிட கழிவுகளும் சுரங்கப்பாதை அருகே போடப்பட்டதால் பொதுமக்களால் அந்த சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே வேறு வழியின்றி வாகனங்கள் செல்ல பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதையில் மக்கள் நடந்து சென்று பயன்படுத்தி வருகின்றனர். அங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் உயிரை கையில் பிடித்து அச்சத்துடனே நடந்து சென்று வருகின்றனர்.

சமூக விரோதிகளுக்கு கூடாரம்

மழைநீர் தேங்கியும், கழிவுகள் கொட்டப்பட்டும் பயன்படாமல் உள்ள சுரங்க நடைபாதை பகுதியில் அனுமதி இன்றி ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பயன்தராமல் உள்ள சுரங்க நடைப்பாதை தற்போது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மர்மநபர்களுக்கு கூடாரமாக இருந்து வருகிறது. அங்கு உள்ள கட்டிட கழிவுகளை அகற்றி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி உயிரற்று கிடக்கும் சுரங்க நடைபாதைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதே ஆலந்தூர் சுற்றுவட்டார மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே கூடிய விரையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்த சுரங்கப்பாதையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்