சுடுகாட்டை குத்தகைக்கு எடுத்து இருப்பதாக கூறி மூதாட்டியின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. பிரமுகர்

சுடுகாட்டை குத்தகைக்கு எடுத்து இருப்பதாக கூறி மூதாட்டியின் உடலை புதைக்க அ.தி.மு.க. பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இறுதி ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-03 22:45 GMT

வேப்பூர்,

வேப்பூர் மற்றும் கூட்டுரோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரு பகுதி மக்களுக்கும் தனித்தனியே சுடுகாடு உள்ளது. இதில் கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடம், திட்டக்குடியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த இடத்தை அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் ஒருவர், கோவிலில் இருந்து தான் குத்தகைக்கு எடுத்து இருப்பதாகவும், எனவே இங்கு பிணங்களை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என்று கூட்டுரோடு பகுதியில் வசிப்பவர்களிடம் தெரிவித்து இருந்தார்.

நேற்று, வேப்பூர் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த பொன்னுத்தாயி (வயது 60) என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை வழக்கம் போல் அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல, முடிவு செய்திருந்தனர். இதையறிந்த அ.தி.மு.க. பிரமுகர், அங்கு வந்து பொன்னுத்தாயின் உடலை அந்த பகுதியில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இருப்பினும் பொன்னுத்தாயின் உடலை கூட்டுரோடு பகுதி சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் விரைந்து சென்று, இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, அங்கு கொண்டு சென்றால் தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கூறினர்.

தொடர்ந்து இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேப்பூரில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து பொன்னுதாயின் உடலை வேப்புர் சுடுகாட்டுக்கு சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ம்.

மேலும் செய்திகள்