கலெக்டர் உத்தரவிட்டும் கோவில் குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை

திருவண்ணாமலையில் துர்க்கை அம்மன் கோவில் குளத்தை சுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2018-01-03 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகரத்தில் துர்க்கை அம்மன், அங்காள அம்மன், காளியம்மன் உள்பட பல்வேறு கோவில்களும், சித்தர்கள் பீடங்களும், ஆசிரமங்களும் உள்ளன. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் அக்னி குளம், சக்கரகுளம், அய்யங்குளம், தாமரைக்குளம், சிம்மக்குளம் என பல்வேறு குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் கடந்த மாதம் பெய்த மழையினால் நீர் நிரம்பி உள்ளது.

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே சின்னக்கடை தெருவில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள குளத்தின் மேல் பகுதியில் செடிகளாலும், குப்பைகளாலும், பிளாஸ்டிக் கவர்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு காணப்படுகிறது. மேலும் குளத்தின் ஒரு பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், துர்க்கை அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெங்கு ஒழிப்பு பணியின் போது மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த குளத்தை கலெக்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், குளத்தை சுத்தம் செய்து அதனை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் உத்தரவிட்டும் அந்த குளம் இன்னும் சுத்தம் செய்யப்படாமலும், வேலி அமைக்கப்படாமலும் உள்ளன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்